நன்னடத்தை விதிகள் பொருந்தாது: சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க முடியாது கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. பேட்டி

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என்றும், எனவே அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்றும் கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. என்.எஸ்.மேகரிக் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-21 23:49 GMT
பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நன்னடத்தை அடிப்படையில் சசிகலா தண்டனை காலத்துக்கு முன்பாகவே சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட இருப்பதாகவும், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலாவின் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். மேலும் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட உள்ளார் என்று சமூக வலைத்தளங்களிலும் தகவல்கள் பரவின.

இந்த நிலையில் கன்னட ராஜ்யோத்சவா தினத்தையொட்டி நேற்று கர்நாடகத்தில் ஒரு பெண் உள்பட 141 ஆயுள் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கான விழா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நடந்தது. இந்த விழாவில் கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. என்.எஸ்.மேகரிக் கலந்துகொண்டார்.

இந்த நிலையில் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவாரா என கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. என்.எஸ்.மேகரிக்கிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து அவர் பதிலளிக்கையில், ‘கர்நாடக சிறைத்துறை விதிகள்படி கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் மட்டும் நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலத்துக்கு முன்பாக விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கும் சில கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் சசிகலா தண்டனை பெற்றுள்ள வழக்கிற்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது. இதனால் அவர் தண்டனை காலம் முழுவதையும் சிறையில் அனுபவித்த பிறகே விடுதலையாக முடியும்‘ என்றார்.

மேலும் செய்திகள்