புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்கள் இலவச வீட்டுமனை பட்டாவுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்

வேலூர் மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்கள் இலவச வீட்டுமனை பட்டாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2019-10-22 22:30 GMT
வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் ஈட்டும் தகுதி வாய்ந்தவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலை, நீர்நிலை புறம்போக்கு உள்ளிட்ட ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் தகுதியான நபர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரும் பொருட்டு கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் கிராமப்புறங்களில் உள்ள சாலை, ஏரி, குளம், கால்வாய் உள்ளிட்ட ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்துவரும் நபர்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்கி பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதைத்தவிர கிராமப்புற மற்றும் மாநகராட்சி, பேரூராட்சி் மற்றும் நகராட்சி பகுதிகளில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் நபர்களுக்கு அதே இடத்தில் வரன்முறைப்படுத்தி இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை மாவட்டம் முழுவதும் 15,746 நபர்கள் தகுதி உடையவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்த பட்டியல் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே சொந்தமாக நிலம் வைத்திருப்போர், அரசால் பட்டா வழங்கப்பட்டோர், அரசு பணிகளில் இருப்போர், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், ரூ.3 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உடையவர்கள் இத்திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா பெற தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

மாவட்டம் முழுவதும் கணக்கெடுத்து மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில் தகுதியான நபர்களின் பெயர்கள் விடுபட்டு இருப்பின் http://vellore.nic.in/notice_category/announcements என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் தக்க ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்