திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு: சுரேசிடம் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் சுரேசிடம் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி ஸ்ரீரங்கம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

Update: 2019-10-23 23:15 GMT
திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த 2-ந் தேதி அதிகாலை கொள்ளை நடந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் திருவாரூரை சேர்ந்த முருகன், சுரேஷ், மதுரையை சேர்ந்த கணேசன் உள்ளிட்ட கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. முருகன் பெங்களூரு கோர்ட்டிலும், சுரேஷ் செங்கம் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர். இதையடுத்து திருச்சி போலீசார் கோர்ட்டு உத்தரவை பெற்று, சுரேசை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். முருகனிடம் பெங்களூரு போலீசாரும், கணேசனிடம் திருச்சி தனிப்படை போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த கொள்ளை வழக்கில் முருகன், சுரேஷ் உள்ளிட்ட கொள்ளை கும்பலுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.

கோர்ட்டில் மனுதாக்கல்

பஞ்சாப் நேஷனல் வங்கி சுவரில் துளையிட்டு 470 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.19 லட்சத்தை கொள்ளையடித்து சென்று இருந்தனர்.

இந்த வங்கி கொள்ளை வழக்கில் சுரேசை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீது நீதிபதி சிவகாமசுந்தரி விசாரணை நடத்தினார்.

அப்போது சுரேஷ் தரப்பில் ஆஜரான வக்கீல், "ஏற்கனவே லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் சுரேசை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணை முடிவடைந்த நிலையில், அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது மீண்டும் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை தொடர்பாக அவரிடம் விசாரித்தால் மிகவும் பாதிக்கப்படுவார்"் என்று தெரிவித்தார்.

7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

ஆனால் தனிப்படை போலீசாரோ, சுரேசிடம் 7 நாள் விசாரணை நடத்த அனுமதி வேண்டும் என்று கோரினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இதனை தொடர்ந்து நேற்று காலை மீண்டும் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சுரேசை தனிப்படை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மனுவை விசாரித்த நீதிபதி சிவகாமசுந்தரி, சுரேசை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து தனிப்படை போலீசார் சுரேசை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகி றார்கள். ஏற்கனவே பஞ்சாப் நேஷனல் வங்கி தொடர்பாக கணேசனை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். தற்போது சுரேசிடமும் விசாரணையை தொடங்கி இருப்பதால் இந்த வழக்கிலும் மேலும் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்