நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - கலெக்டர் உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டார்.

Update: 2019-10-23 22:30 GMT
கிரு‌‌ஷ்ணகிரி, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழை 2019 தயார் நிலை பணிகள் தொடர்பான பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் வெள்ள பாதிப்பு பகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், பேரிடர் நிகழ்வுகள் ஏதும் ஏற்படாவண்ணம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பேரிடர் நிகழ்வுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

நீர்நிலை, புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடுமாறும், நீர் வழித்தடங்கள், கழிவு நீர் கால்வாய்களை சுத்தப்படுத்தி தங்கு தடையின்றி நீர் வெளியேற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் அமைந்துள்ள நீர்வழிப்பாதைகளை சுத்தப்படுத்தி அசம்பாவிதம் நிகழாவண்ணம் பாதுகாப்புடன் வைக்க வேண்டும். பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு கோட்ட அளவில் மற்றும் வட்டார அளவில் பேரிடர் மேலாண்மை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

அனைத்து துறை சார்ந்த மாவட்ட நிலையிலான அலுவலர்களின் முகவரி, மின்னஞ்சல், செல்போன் எண் ஆகிய விவரங்களை பெற்று தகவல் தொடர்பை மேம்படுத்தும் நோக்கில் தகவல் தொகுப்பு ஏற்படுத்தி, ஒதுக்கப்பட்ட பணிகளை செய்ய வேண்டும். துறை ரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, ஊசிகள், மருந்துகள், மீட்பு சாதனங்கள் அனைத்தையும் கையிருப்பு வைத்து தயார் நிலையில் இருக்க வேண்டும்.

கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்க கூடிய கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண் உள்ளது. மேலும் 04343 - 234444 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் பேரிடர், வெள்ள பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, உதவி கலெக்டர்கள் தெய்வநாயகி, குமரேசன், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்