தீபாவளி பண்டிகைக்காக சீன பட்டாசுகள் விற்பனையை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு

தீபாவளி பண்டிகைக்காக சீன பட்டாசுகள் விற்பனையை கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2019-10-24 22:30 GMT
திருப்பூர், 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் போக்குவரத்து நெரிசல் முறைப்படுத்துதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கி பேசியதாவது:-

தீபாவளி பண்டிகைக்காக திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு அதிகளவில் பொதுமக்கள் செல்வதால் போதுமான அளவுக்கு பஸ் வசதிகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்ய வேண்டும். பிற மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்களை திருப்பூர் புறநகரில் இருந்து இயக்க துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் வந்து செல்லும் பஸ் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் தகுந்த தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பொது சுகாதார பணியாளர்கள், பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய பஸ் நிலையங்களில் குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பஸ் நிலையங்களில் மருத்துவக்குழுவை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் அமைத்து பொதுமக்களுக்கு உதவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வெளியூருக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் அதிக பயண கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறதா? என்பதை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதோடு உரிய ஆவணங்களுடன் பஸ்கள் இயக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி பட்டாசு கடைகள் அமைந்துள்ள இடங்களை விழிப்புடன் கண்காணித்து பொதுமக்களுக்கு விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாட தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சீன மற்றும் வெளிநாட்டு பட்டாசுகள் மாவட்டத்தில் எங்காவது விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா, திருப்பூர் ஆர்.டி.ஓ. கவிதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். க திருப்பூர் துணை மேலாளரை 94421 10877, உதவி மேலாளரை 88259 90791, துணை மேலாளரை(தொழில்நுட்பம்) 94421 14877, பழைய பஸ் நிலைய பொறுப்பாளரை 94878 98541, புதிய பஸ் நிலைய பொறுப்பாளரை 99426 04454 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்