சேலம் மத்திய சிறை வளாகத்தில் ‘ஹெலிகேமரா’ பறந்ததால் பரபரப்பு வாலிபரிடம் போலீசார் விசாரணை

சேலம் மத்திய சிறை வளாகத்தில் ஹெலி கேமரா பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-10-24 22:30 GMT
சேலம்,

சேலம் அஸ்தம்பட்டியில் இருந்து ஏற்காடு செல்லும் சாலை பகுதியில் மத்திய சிறை உள்ளது. இங்கு விசாரணை மற்றும் தண்டனை என 850-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களை பார்ப்பதற்காக அவர்களது உறவினர்கள் மத்திய சிறைக்கு வந்து செல்வார்கள். இதனால் தினமும் காலை முதல் மாலை வரை சிறை வளாகத்தில் பொதுமக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த நிலையில் நேற்று மதியம் சேலம் மத்திய சிறையின் சுற்றுச்சுவர் பகுதியில் ‘ஹெலிகேமரா’ ஒன்று பறந்தது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறை வார்டன்கள் மற்றும் போலீசார் சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வனிடம் தகவல் கொடுத்தனர். இதையொட்டி ஹெலிகேமராவை பறக்க விட்டது யார்? என்பது குறித்தும் அவரை பிடித்து வரக்கோரியும் உத்தரவிட்டார்.

பரபரப்பு

இதையொட்டி போலீசார் ஹெலிகேமராவை இயக்கிக்கொண்டிருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அஸ்தம்பட்டியில் இருந்து ஏற்காடு அடிவாரம் பகுதி வரை சாலையை அளவிடும் பணிக்காக ‘ஹெலி கேமரா’ பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

போலீசார் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர்கள் சாலை அளவிடும் பணி நடைபெற்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்தனர். இதையொட்டி அந்த வாலிபரை போலீசார் விடுவித்தனர். இதனால் சேலம் மத்திய சிறை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்