குடியாத்தம் அருகே, வாகன சோதனையில் சிக்கிய கொள்ளையன் - சித்தூரில் திருடச்சென்றபோது பிடிபட்டார்

குடியாத்தம் அருகே நடந்த வாகன சோதனையில் கர்நாடகாவை சேர்ந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். நண்பருடன் சித்தூரில் திருடச்சென்றபோது அவர் பிடிபட்டுள்ளார்.

Update: 2019-10-25 23:00 GMT
குடியாத்தம், 

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் தமிழக எல்லையான பரதராமியை அடுத்த கன்னிகாபுரத்தில் வனத்துறை சோதனைச்சாவடி உள்ளது. இங்கு நேற்று வனச்சரக அலுவலர் கஜேந்திரன் தலைமையில் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது குடியாத்தத்தில் இருந்து சித்தூர் நோக்கி வேகமாக ஒரு கார் வந்தது. அந்த காரை நிறுத்துமாறு வனத்துறையினர் சைகை காட்டினர். இதனை பார்த்ததும் காரை சற்று தூரத்திலேயே நிறுத்தினார். உடனே காரில் இருந்து இறங்கி ஒருவர் வனப்பகுதிக்குள் தப்பி ஓடினார். இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் விரைந்து சென்று கார் டிரைவரை பிடித்துக்கொண்டனர். அவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார்.

அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கர்நாடகா மாநிலம் பங்காருபேட்டையை அடுத்த மாலூர் பகுதியை சேர்ந்த சீனிவாசலு மகன் மஞ்சுநாத் (வயது 24) என்பது தெரியவந்தது. மேலும் இவர் ஓசூர், கோலார், பெங்களூரு போன்ற பகுதிகளில் கார் திருட்டு, வீடு புகுந்து கொள்ளையடிப்பது, செல்போன் திருட்டு போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருந்ததும் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இவரை கர்நாடக போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில்தான் நண்பருடன் ஆந்திர மாநிலம் சித்தூரில் திருடச்சென்றதும் காரை நிறுத்தியவுடன் அதில் வந்த இவரது நண்பர் தப்பிஓடியதும் தெரியவந்தது. மேலும் அவர் ஓட்டிவந்த காரின் நம்பரும் போலியானதாகும்.

இதுகுறித்து கோலார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிடிபட்ட கொள்ளையன் மஞ்சுநாத்தை கோலார் நகருக்கு அழைத்து சென்றனர். அவர் ஓட்டிவந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே காட்டுக்குள் தப்பி ஓடியவர் குறித்து விசாரித்தபோது அவருடைய பெயரை மஞ்சுநாத், மாற்றி மாற்றி கூறி உள்ளார். இதனால் தப்பி ஓடியவரின் உண்மையான பெயர் தெரியவில்லை. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்