ரூ.13 ஆயிரத்து 260 கோடி கடன் வழங்க இலக்கு - கலெக்டர் சி.கதிரவன் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் ரூ.13 ஆயிரத்து 260 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.

Update: 2019-10-26 23:30 GMT
ஈரோடு,

நபார்டு வங்கியின் முன்னுரிமை கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி ஈரோடு கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி, கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நபார்டு வங்கி ஆண்டுதோறும் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை தயார் செய்கிறது. அதன்படி வங்கிகளுக்கு கடன் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 2020-2021 நிதி ஆண்டுக்கு ரூ.13 ஆயிரத்து 259 கோடியே 51 லட்சம் கடன் வழங்க வாய்ப்பு இருப்பதாக நபார்டு வங்கி திட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. சென்ற ஆண்டு(நடப்பு 2019-2020) இலக்கு ரூ.12 ஆயிரத்து 34 கோடியே 69 லட்சமாக இருந்தது. அது 10 சதவீதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்டம் விவசாயத்தின் முன்னோடி மாவட்டமாக இருப்பதால் மொத்த தொகையில் விவசாயத்துக்கு மட்டும் ரூ.7 ஆயிரத்து 451 கோடியே 49 லட்சம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட ரூ.892 கோடி அதிகமாகும்.

வாகனம், ஆடை தயாரிப்பு, உணவு பதனிடுதல், சிறு, குறு தொழில் துறைகளுக்கு ரூ.2 ஆயிரத்து 865 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. எனவே இந்த கடன் திட்ட அறிக்கையில் ரூ.3 ஆயிரத்து 535 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் வங்கிகள் ரூ.375 கோடி கடன் வழங்கவும், முத்ரா திட்டத்தின் மூலம் அதிக கடன் வழங்கவும் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த திட்ட அறிக்கைதெரிவிக்கிறது.

இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ச.அரவிந்தன், நபார்டு வங்கி உதவிப் பொது மேலாளர் சி.ஆர்.அபுவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்