அமைச்சர் கந்தசாமியின் வீட்டை கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் முற்றுகை

போனஸ் வழங்கக்கோரி கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் அமைச்சர் கந்தசாமியின் வீட்டை முற்றுகையிட்டனர்.

Update: 2019-10-26 23:15 GMT
புதுச்சேரி,

திருபுவனையில் கூட்டுறவு நூற்பாலை உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

தீபாவளி பண்டிகைக்கான போனசும் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று முன்தினம் சம்பளம் மற்றும் போனஸ் வழங்கக்கோரி நூற்பாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த யாரும் முன்வரவில்லை. இதைத்தொடர்ந்து அவர்களை திருபுவனை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

இந்தநிலையில் நேற்று காலை தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் முதலியார்பேட்டையில் உள்ள அமைச்சர் கந்தசாமியின் வீட்டை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து தடுப்புகளை அமைத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

மில் தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமைச்சர் கந்தசாமியும் அழைப்பு விடுத்தார். அப்போது மில்லுக்கு ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்குரிய அனுமதியை அரசு வழங்கிவிட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்படாததால் போனஸ் வழங்க முடியவில்லை. தற்போது விடு முறையாக இருப்பதால் வருகிற 29-ந்தேதிதான் அரசாணை வெளியிட முடியும். அன்றைய தினம் போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அவரது உறுதிமொழியை ஏற்று தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்