மாவட்டத்தில், 4-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் - நோயாளிகள் கடும் அவதி

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.

Update: 2019-10-28 22:30 GMT
விழுப்புரம்,

இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி இல்லாமல் நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மருத்துவ பணியிடங்களை உருவாக்கி மருத்துவர்களை நியமிக்க வேண்டும், மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 25-ந் தேதி முதல் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக அரசு டாக்டர்கள் சங்க பிரதிநிதிகளுடன் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலாராஜேஷ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அரசு டாக்டர்களின போராட்டம் நீடித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்திலும் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, செஞ்சி, மேல்மலையனூர், திருக்கோவிலூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், வானூர், மரக்காணம் உள்ளிட்ட அனைத்து தாலுகா அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 450 டாக்டர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளுக்கு டாக்டர்கள் பணிக்கு வராததால், அங்கு ஏற்கனவே உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை செவிலியர்கள் கவனித்து வருகின்றனர். அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் ஒன்றிரண்டு டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் புறநோயாளிகள் பிரிவை டாக்டர்கள் முற்றிலும் புறக்கணித்துள்ளனர்.

தற்போது மழைக்காலம் என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் காய்ச்சல், சளி, இருமல் தொல்லையால் அவதிப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தான் பெரும் அவதிப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அரசு டாக்டர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்