சுஜித் பெற்றோருக்கு தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதி: மீட்பு பணியில் தமிழக அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டது

குழந்தை சுஜித் கல்லறையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவனது பெற்றோருக்கு தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கிய மு.க.ஸ்டாலின், மீட்பு பணியில் தமிழக அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டது என குற்றம் சாட்டினார்.

Update: 2019-10-29 23:15 GMT
மணப்பாறை,

திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் 4 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டான். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு ஆவாரம்பட்டி பாத்திமாபுதூரில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுவதற்காக நேற்று காலை 10.30 மணிஅளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

திருச்சியில் இருந்து மணப்பாறைக்கு காரில் சென்ற அவர், அங்கு பாத்திமாபுதூரில் சுஜித் அடக்கம் செய்த கல்லறைக்கு சென்று மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

ரூ.10 லட்சம் நிதி

அவருடன் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் திருச்சி சிவா, திருநாவுக்கரசர், ஜோதிமணி, எம்.எல்.ஏ.க்கள் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, செந்தில்பாலாஜி மற்றும் பலர் வந்தனர். பின்னர் அங்கிருந்து நடுக்காட்டுப்பட்டிக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு சுஜித்தின் தாய் கலாமேரி, தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜ் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறி, கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண உதவியை வழங்கினார்.

பின்னர் அவர், குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றையும், குழந்தையை மீட்க அதன் அருகே பக்கவாட்டில் பள்ளம் தோண்டிய இடத்தையும் பார்வையிட்டார். அதன்பிறகு மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசின் மெத்தனப்போக்கே காரணம்

சுமார் 80 மணிநேரம் உயிருக்காக போராடிக் கொண்டு இருந்த 2 வயது குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்கமுடியவில்லை. அந்த மகனை இழந்து வாடும் தாய், தந்தைக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் இங்கு வந்துள்ளேன். 80 மணிநேரம் அந்த குழந்தையை மீட்பதற்கு நேரம் எடுத்துக் கொண்டு இருந்தாலும், மீட்பு பணியை பொறுத்தவரை இந்த அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டுள்ளது. குறிப்பாக எந்த இடத்தில் எப்படிப்பட்ட பாறை இருக்கிறது. அது கடின பாறையா?. மென்மையான பாறையா?. அங்குள்ள மண் எப்படி இருக்கிறது?. என அறிந்து வைக்க வேண்டிய துறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை. 30 அடி ஆழத்தில் சிக்கி இருந்தபோதே, குழந்தையை காப்பாற்றி இருக்க முடியும்.

அமைச்சர்களோ, அதிகாரிகளோ டி.வி.க்கு பேட்டி தருவதில் காட்டிய ஆர்வத்தை மீட்பு பணியில் காட்டவில்லை என்ற எண்ணம் எல்லோருக்கும் உள்ளது. சம்பவம் நடந்த உடனேயே தேசிய மீட்பு படையையும், ராணுவத்தையும் அழைத்து இருக்க வேண்டும். ஏன் அழைக்கவில்லை?. அரசை குறை சொல்வது எனது நோக்கம் இல்லை. இனிமேல் யாருக்கும் இதுபோல் நடக்கக்கூடாது என்பது தான் எனது எண்ணம். நான் முன்பே இங்கு நேரடியாக வந்து பார்த்து இருப்பேன். ஆனால் அப்படி வந்து பார்த்தால் குழப்பம் தான் ஏற்படும். தேவையில்லாத அரசியல் சாயம் பூசுவார்கள். அதனால் தான் அதை தவிர்த்துவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அறிக்கை

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைவரையும் ஏக்கத்திலும், மீள முடியாத துக்கத்திலும் விட்டு விட்டு அந்தோ, அந்த அரும்பு சுஜித் நம்மை விட்டு பிரிந்து விட்டதே என்று நினைக்கும் போது என் இதயம் கனக்கிறது. ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அந்த குழந்தையை உயிருடன் மீட்க கிடைத்த நேரங்கள் எல்லாம் மொத்தமாக வீணடிக்கப்பட்டது கண்கூடு.

அடுக்கடுக்கான கேள்விகள்

பேரிடரில் ஒரு குடிமகனை காப்பாற்ற வேண்டியது அரசின் முதல் கடமை. இந்த தோல்விக்கு என்ன காரணம்? தொழில்நுட்ப அணுகுமுறையில் தமிழகம் பின்தங்கியுள்ளதா? திட்டமிட்டு செயல்படுவதில் மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் தமிழக அரசு இன்னும் முழுமையான அனுபவம் பெறவில்லையா? சுஜித்தை மீட்க ராணுவம் அல்லது துணை ராணுவத்தை ஏன் முன்கூட்டியே அழைக்கவில்லை? ஒரு சுஜித்தை காப்பாற்ற முடியாத அ.தி.மு.க. ஆட்சியினர் பேரிடர் நேரங்களில் எப்படி தமிழக மக்களை காப்பாற்றப்போகிறார்கள்? என்று கேட்க விரும்புகிறேன்.

இதுவரை மாநிலம் மற்றும் மாவட்ட ரீதியாக “பேரிடர் மேலாண்மை திட்டங்கள்” தயாரிக்கப்பட்டுள்ளதா? இல்லையா?. பேரிடர் பணிகளை செய்வதற்கு நவீன தொழில்நுட்ப ரீதியாக உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளதா? இல்லையா? பேரிடர் நிதி எல்லாம் எதற்காக செலவிடப்படுகிறது? என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

முதலும், கடைசியுமாக...

ஆகவே தாங்கமுடியாத - துயரமான சுஜித்தின் மரணம் தமிழகத்தில் முதலும் கடைசியுமாக இருக்கட்டும். இனியொரு நிகழ்வு இப்படி தமிழகத்தில் அறவே நடக்கக்கூடாது. இனியாவது எஞ்சியிருக்கின்ற நாட்களில் அ.தி.மு.க. அரசு விழித்தெழ வேண்டும். அ.தி.மு.க. அரசை மட்டும் நம்பி பயனில்லை என்பதால் ஆங்காங்கே உள்ள தி.மு.க. தொண்டர்கள் “பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள்”, “பாதுகாப்பற்ற முறையில் உள்ள ஆழ்துளை கிணறுகள்” போன்றவற்றின் தகவல்களை சேகரித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்து அவற்றை மூடுவதற்கும், தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கும் உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்