போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-29 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தில் கடந்த 27-ந் தேதி இரவு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த அரவிந்த்(வயது 22), குமார்(29), ராமச்சந்திரன்(34) ஆகியோரை மற்றொரு தரப்பை சேர்ந்த சத்தியகீர்த்தி உள்பட சிலர் இரும்பு கம்பிகளால் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் அரவிந்த், குமார் இருவரும் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து, ஒரு தரப்பை சேர்ந்த கண்ணதாசன், சதீஷ், செல்வம், செந்தில்குமார், பாஸ்கர், மணிகண்டன், அறிவழகன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சத்தியகீர்த்தி உள்பட 6 பேரை தேடி வருகின்றனர்.

முற்றுகை

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்வதற்காக லாடபுரம் கிராமத்துக்கு போலீசார் சென்றனர். அப்போது ஒருதரப்பை சேர்ந்த வடிவேல் மகன் முருகேசன்(45) மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். போலீசார் முருகேசனை கைது செய்துவிடுவதாக மிரட்டியதால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக்கூறி அவரது தரப்பை சேர்ந்தவர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலவரத்துக்கு காரணமானவர்கள் எனக்கூறி கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும். மேலும் கைது செய்துவிடுவதாக அப்பாவி பொதுமக்களை அடிக்கடி போலீசார் மிரட்டுவதை கைவிடவேண்டும். லாடபுரம் கிராமத்தில் அடிக்கடி நடந்துவரும் ஜாதி மோதல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து பெரம்பலூர் தாசில்தார் பாரதிவளவன் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு முதல் உதவி சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரனிடம் அளித்த பொதுமக்கள், உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக்கூறி அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்