அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

கரூர் அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2019-10-29 22:45 GMT
கரூர்,

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து, 90 அடி உயரமுள்ள அணையில் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டும் போதுதான் கரூர் அமராவதி ஆற்றில் உபரிநீர் திறக்கப்படுகிறது. அமராவதி ஆறு, கரூர் நகர் வழியாக சென்று திருமுக்கூடலூர் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த தண்ணீர் பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாய நிலங்களுக்கும் பயன்படுகிறது.

தற்போது மழை பெய்து வருவதால் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.

இந்தநிலையில் திருமாநிலையூர், பசுபதிபாளையம், சுக்காலியூர், சணபிரட்டி உள்ளிட்ட இடங்களில் அமராவதி ஆற்றில் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவு வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கின்றன. மேலும், லைட்-அவுஸ் கார்னர், பழைய அமராவதி பாலம் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் ஆற்றில் கலந்து தேங்கி நிற்கிறது. இதில் குப்பை கழிவுகளும் ஆங்காங்கே கிடக்கின்றன. தேங்கி கிடக்கும் நீரில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்காக வந்து புதைகுழியில் சிக்கி கொள்ளும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

எங்கிருந்து கழிவுநீர் வருகிறது?, யார் அதனை திறந்து விடுகிறார்கள்? என்பதை கண்டறிந்து அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதர்மண்டி காட்சியளிக்கும் சீமைக்கருவேல மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி ஆற்றை தூர்வாருவதோடு அதன் கிளை வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும்.

மேலும், கரூர் நகரில் ஓடும் ரெட்டை வாய்க்காலையும் தூர்வாரி ஆழப் படுத்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்