சேலத்தில் ரூ.1¼ கோடி மோசடி; 2 பேர் கைது - தம்பதியை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு

சேலத்தில் ரூ.1¼ கோடி மோசடி புகாரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், ஏற்கனவே கைதான தம்பதியை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் போலீசார் மனு செய்துள்ளனர்.

Update: 2019-10-29 22:00 GMT
சேலம், 

சேலம் ரெட்டிப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 38). இவருடைய மனைவி இந்துமதி (35). இவர்கள் இருவரும் தங்களது நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கொடுத்தால் 100 நாட்களில் இரட்டிப்பு பணம் கொடுப்பதாகவும், நீண்ட நாள் முதலீட்டுக்கு 25 சதவீத வட்டி தருவதாகவும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர். இதனால் அவர்களிடம் ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் அவர்கள் ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.

இது சம்பந்தமாக கணவன், மனைவி இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது இதுவரை 35 பேருக்கும் மேற்பட்டோர் மோசடி புகார் கொடுத்துள்ளனர். அதாவது, ரூ.15 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்தநிலையில் சேலம் அம்மாபேட்டை வித்யாநகரை சேர்ந்த கார்த்திக் (30) என்பவர், தன்னிடம் ரூ.1 கோடியே 26 லட்சம் மோசடி செய்துவிட்டதாக, மணிவண்ணனின் கூட்டாளிகளான எடப்பாடி பகுதியை சேர்ந்த மோகன் (33), மாதையன் (37) ஆகியோர் மீது போலீசில் புகார் செய்திருந்தனர். அதன்பேரில் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் தாங்கள் வாங்கிய பணம் அனைத்தையும் மணிவண்ணனிடம் கொடுத்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் மணிவண்ணன், அவரது மனைவி இந்துமதி ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேலம் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் பட்சத்தில் பல கோடி ரூபாய் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது? அந்த பணத்தை கொண்டு நிலம் வாங்கி உள்ளனரா? என்பது குறித்த பல்வேறு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்