மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: குளத்தில் தவறி விழுந்து முதியவர் பலி - அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது

திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. வீட்டுக்குள் மழைநீர் வராமல் தடுக்க முயன்ற போது குளத்தில் தவறி விழுந்து முதியவர் ஒருவர் பலியானார். அங்கன்வாடி மையத்தின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது.

Update: 2019-10-29 22:15 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. சாரல் மழையாக தொடங்கி சிறிது நேரத்தில் பலத்த மழையாக கொட்டி தீர்க்கும் மழையால் திண்டுக்கல் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவும் சாரல் மழை பெய்தது.

பின்னர் நேற்று அதிகாலையில் பலத்த மழையாக மாறியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் மழை பெய்தது. மழை காரணமாக திண்டுக்கல் மாநகராட்சி வார்டு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. அப்போது சில வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதேபோல் வேடசந்தூர், பழனி, வடமதுரை, கொடைக்கானல் பகுதிகளில் மழை பெய்தது.

இந்தநிலையில் திண்டுக்கல்- சிலுவத்தூர் ரோட்டில் உள்ள குளத்துக்கு அருகே வசிப்பவர் பாண்டி (வயது 80). நேற்று அதிகாலை பெய்த மழையால் இவருடைய வீட்டின் அருகே மழைநீர் தேங்கி நின்றது. இதையடுத்து மழைநீர் வீட்டுக் குள் புகாமல் தடுப்பதற்காக கால்வாய் போல் அமைத்து தண்ணீரை குளத்துக்குள் திருப்பி விட பாண்டி முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக குளத்துக்குள் தவறி விழுந்த அவர், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த திண்டுக்கல் வடக்கு போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமதுரை அருகே உள்ள ஊராளிபட்டியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பழமையான அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந் தது.அங்கன்வாடி பணியாளர் கள் நேற்று காலையில் மையத்தை திறந்த போது, மேற்கூரை இடிந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இரவு நேரம் விழுந்ததால் குழந்தைகள் யாரும் இல்லை. இல்லையெனில் பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டு இருக் கும். அதன்பின்னர் குழந்தைகள் அங்கன்வாடி கட்டிடத்தின் வெளியே அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு தயார் செய்து வழங்கப்பட்டது.

கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொப்பு, தடியன்குடிசை, மஞ்சள்பரப்பு, கொங்கப்பட்டி, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையில் மஞ்சள்பரப்பு-புல்லாவெளி இடையே மலைப்பாதையில் இலவம் மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜோதிபாஸ் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நேற்று காலை 8.30 மணி வரை திண்டுக்கல்லில் 24 மில்லி மீட்டரும், நத்தத்தில் 7 மி.மீட்டரும், வேடசந்தூரில் 6.2 மி.மீட்டரும், கொடைக்கானலில் 10.6 மி.மீட்டரும் மழை பதிவானது. 

மேலும் செய்திகள்