திருப்பூரில் கல்லூரி பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; பெண் சாவு

திருப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது கல்லூரி பஸ் மோதியதில் பெண் பலியானார். இதில் மருமகன் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

Update: 2019-10-30 22:15 GMT
நல்லூர்,

திருப்பூர், திருக்குமரன் நகரை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி பார்வதி (வயது 57). இவர் நேற்று காலை 8 மணியளவில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீரபாண்டியை சேர்ந்த மருமகன் கருப்புசாமியுடன் மோட்டார் சைக்கிளில் சிவன் மலைக்கு சென்றார். திருப்பூர் சந்திரபுரத்தில் ஒரு பேக்கரி அருகே சென்ற போது, எதிரே வந்த ஈரோடு திண்டலை சேர்ந்த ஒரு தனியார் கல்லூரி பஸ், இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

கீழே விழுந்த பார்வதி கல்லூரி பஸ்சின் சக்கரத்தில் சிக்கி கொண்டார். சில அடி தூரம் வரை பஸ் அவரை இழுத்து சென்றது. விபத்து நடந்ததை அறிந்ததும் கல்லூரி பஸ்சை நிறுத்திய டிரைவர் திண்டல் பகுதியை சேர்ந்த நடராஜ்(59) அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தில் கல்லூரி பஸ் சக்கரத்தில் சிக்கிய பார்வதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அவரது மருமகன் கருப்புசாமி படுகாயம் அடைந்தார். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. கல்லூரி பஸ்சில் வந்த மாணவிகள் அனைவரும் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஊரக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த கருப்புசாமிக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கல்லூரி பஸ் டிரைவர் நடராஜை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்