திருப்பூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் 6-வது நாளாக போராட்டம்

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் 6-வது நாளாக நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சர் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-10-30 22:45 GMT
திருப்பூர்,

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதியம் வழங்கப்பட வேண்டும். இந்திய மருத்துவ கழகம் டாக்டர்களின் எண்ணிக்கையை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் குறைக்கக்கூடாது. அரசு டாக்டர்களுக்கு முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக்கல்வியில் ஏற்கனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை அரசு நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 6-வது நாளாக நேற்று அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 7.30 மணியில் இருந்து மதியம் 2 மணி வரைக்கும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் டாக்டர்கள் கிருபானந்த், கார்த்திகேயன், ஹரிகரகுகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் பாதிக்காதவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். காலை முதல் மதியம் வரை அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் டாக்டர்கள் பணியில் இருக்கிறார்கள்.

இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். தமிழக முதல்- அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தையில் உடனே ஈடுபட வேண்டும். போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்