மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை எதிரொலி: தமிழக-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை

மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக தமிழக -கேரள எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2019-10-30 22:15 GMT
கூடலூர்,

கேரளாவில் உள்ள வயநாடு, மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களின் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருக்கின்றனர். அவர்கள் வனங்களின் கரையோரம் உள்ள ஆதிவாசி கிராமங்களுக்குள் புகுந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் இருந்து பறித்து செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அட்டப்பாடி பகுதியில் வனத்துறை அலுவலகம் மற்றும் சோதனைச்சாவடியை மாவோயிஸ்டுகள் தீக்கிரையாக்கினர். மேலும் திருநெல்லியில் தனியார் தங்கும் விடுதி மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு கூடலூர் அருகே நிலம்பூரில் உள்ள படகா வனத்தில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் மீது தண்டர்போல்ட் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதேபோன்று கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி வைத்திரியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்குள் நுழைந்த மாவோயிஸ்டுகள் மீது தண்டர்போல்ட் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் ஜலீல் என்ற மாவோயிஸ்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும் கடந்த 28-ந் தேதி மஞ்சகண்டி வனப்பகுதியில் 20 மாவோயிஸ்டுகள் மீது தண்டர்போல்ட் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் கார்த்திக், ஸ்ரீமதி, சுரேஷ் ஆகிய 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் தப்பி ஓடினர். அவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மீண்டும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அதில் மாவோயிஸ்டு இயக்க முக்கிய தலைவன் மணிவாசகத்தை போலீசார் சுட்டுக்கொன்றனர். மேலும் பிற மாவோயிஸ்டுகள் துப்பாக்கி குண்டு காயங்களுடன் தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. அவர்கள் மலப்புரம், வயநாடு மாவட்ட வனப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக அதன் கரையோரம் உள்ள கூடலூர், பந்தலூர், முதுமலை, கக்கநல்லா ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் வாகன சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தவிர தமிழக அதிரடிப்படை போலீசார், கூடலூர் வனத்துக்குள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். வனத்துக்குள் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் உள்ளதா? என ஆதிவாசி மக்களிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் பதுங்கி இருந்தால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் கூறியதாவது:-

தமிழக-கேரள எல்லையான நீலகிரி மாவட்டத்தில் அய்யன்கொல்லி, பாட்டவயல், எருமாடு, நாடுகாணி, முள்ளி, கக்கனல்லா, பர்லியார் உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் பணிபுரியும் போலீசாரிடம் தேடப்படும் மாவோயிஸ்டுகளின் புகைப்படங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. அந்த புகைப்படங்களை வைத்து சுற்றுலா வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களில் வருகிறவர்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். ஊட்டி, கூடலூர், மஞ்சூர் ஆகிய இடங்களில் நகர்ப்புறங்களில் இருந்து சிறிது தொலைவில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் 2 நாட்களாக சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி இருக்கிறார்களா? என்று சோதனை நடத்தி வருகிறார்கள்.

பாட்டவயல், எருமாடு, பிதிர்காடு ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் காயத்துடன் மாவோயிஸ்டுகள் யாரேனும் சிகிச்சை பெற வருகிறார்களா? என்று போலீசார் கண்காணித்து வருகின்றனர். சோதனைச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார், எல்லையில் உள்ள போலீஸ் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளார்கள். தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மாவோயிஸ்டு நடமாட்டம் உள்ளதா? என்று தேடுதல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்