சேலம் பெரியார் பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்கள் 4 பேர் பணி இடைநீக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்கள் 4 பேரை பணி இடைநீக்கம் செய்து துணைவேந்தர் குழந்தைவேல் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2019-10-30 22:00 GMT
கருப்பூர், 

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் 300-க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர் களை பணி நிரந்தரம் செய்ய பல்கலைக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும், மாதக் கணக்கில் ஊதியத்தை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு எதிராக சிலர் கருத்துகளை கூறியதால் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் அளித்த விளக்கம் திருப்தியாக இல்லை என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.

இந்தநிலையில், பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளை மீறியதாகவும், பல்கலைக்கழகத்திற்கு எதிராக கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி தொகுப்பூதிய பணியாளர்கள் சக்திவேல், கனிவண்ணன், செந்தில்குமார், கிருஷ்ணவேணி ஆகிய 4 பேரை பணி இடைநீக்கம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் உத்தரவிட்டார்.

இதனிடையே, துணைவேந்தரின் இந்த செயலை கண்டித்தும், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 4 பேரின் உத்தரவை ரத்து செய்யக்கோரியும் நேற்று தொகுப்பூதிய பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் கூறுகையில், தொகுப்பூதிய பணியாளர்களில் சிலர் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களது கோரிக்கையை உயர்கல்வித்துறை செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று 6 மாதத்திற்குள் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும். தவறினால் பல்கலைக்கழகத்தின் அன்றாட பணிகள் பாதிக்காமல் இருப்பதற்காக தற்காலிக ஊழியர்களை பணி நியமனம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

மேலும் செய்திகள்