தொடர் மழை: சென்னை புறநகர் பகுதியில் ஏரிகள் நிரம்பின விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது

தொடர் மழை காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள சில ஏரிகள் நிரம்பின. விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது.

Update: 2019-10-31 23:15 GMT
சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை பொறுத்தமட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சென்னையை பொறுத்தமட்டில் நேற்று வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. நேற்று காலை பல இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்தது. கொளத்தூர், கொரட்டூர், நியூ ஆவடி ரோடு போன்ற பகுதிகளில் நேற்று காலை சுமார் ½ மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தண்ணீர் வரத்து அதிகரிப்பு

இதன் காரணமாக பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பணிக்கு செல்வோர் சிரமப்பட்டனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

பூண்டி ஏரி

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 29.60 அடியாக பதிவாகியது. 1,648 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் வினாடிக்கு 516 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 23 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 549 கனஅடி வீதமும், மழை நீர் வினாடிக்கு 771 கனஅடி வீதமும் வந்து கொண்டிருந்தது. நீர் வரத்து இதே போல் தொடர்ந்தால் பூண்டி ஏரி இன்னும் ஒரு வாரத்தில் வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏரிகள் நிரம்பின

புழல் ஏரியை சுற்றியுள்ள பம்மதுகுளம் ஏரி உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதியில் உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதன்காரணமாக ஏரிகளை ஒட்டி உள்ள வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கின்றன. இந்த ஏரிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் புழல் ஏரிக்கு வருகிறது. இதன் காரணமாக புழல் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

கால்வாய் ஆக்கிரமிப்பு

தொடர் மழையால் அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருகின்ற போதிலும் சென்னையில் உள்ள கொரட்டூர் மற்றும் ரெட்டேரி ஆகிய ஏரிகளுக்கு போதிய அளவு தண்ணீர் வரத்து இல்லை.

கொரட்டூர் ஏரியை பொறுத்தமட்டில் இந்த ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் நீர்வரத்து தடை பட்டுள்ளதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

கிணறுகளில் நீர்மட்டம் உயர்வு

சென்னை வியாசர்பாடி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பள்ளி வளாகம் சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. வகுப்பறைக்கு செல்ல மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

சென்னையை ஒட்டி உள்ள புறநகர் பகுதிகளில் விவசாய கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்