திப்பு சுல்தான் பாடத்தை நீக்க கர்நாடக அரசு முடிவு - போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை விளக்கம்

சர்ச்சைக்குரிய நபராக இருப்பதால், திப்பு சுல்தான் பாடத்தை நீக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

Update: 2019-10-31 23:28 GMT
பெங்களூரு,

கர்நாடக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திப்பு சுல்தான் சர்ச்சைக்குரிய நபராக இருப்பதால், வருங்கால தலைமுறைக்கு அவரது வரலாறு போகக்கூடாது. அதனால் தான் பாடப்புத்தகத்தில் இருந்து அவரது வாழ்க்கை வரலாற்றை நீக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. முந்தைய கூட்டணி அரசும் திப்பு சுல்தான் ஜெயந்தியை அரசு விழாவாக நடத்தவில்லை.

இதுபற்றி எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிந்து கொண்டு பேசுவது நல்லது. வெறும் விளம்பரத்திற்காக பேசினால், அத்தகைய கருத்துக்கு பதிலளிக்காமல் இருப்பதே நல்லது. வேறு வேலை இல்லாததால் எதிர்க்கட்சி தலைவர் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-மந்திரி உள்பட மந்திரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நிவாரண உதவிகளையும் அரசு வழங்கியுள்ளது.

மாநில பா.ஜனதா அரசு செத்துவிட்டதாக சித்த ராமையா சொல்கிறார். ஆட்சி அதிகாரம் பறிபோய்விட்டதால், சித்தராமையா ஏமாற்றம் அடைந்துள்ளார். அதனால் எங்கள் அரசு மீது புழுதி வாரி இறைக்கிறார். அவுராத்கர் அறிக்கைப்படி போலீசாருக்கு சம்பள உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதை அமல்படுத்துவதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. சட்டப்படி இவற்றை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனால் போலீசார் யாரும் குழப்பம் அடைய தேவை இல்லை.

அவுராத்கர் குழு மேலும் ஒரு அறிக்கையை வழங்க உள்ளது. எல்லா துறைகளுக்கும் ஒரே சட்டம் தான் உள்ளது. அதனால் அனைவருக்கும் ஒரே மாதிரியான சம்பள விகிதத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது எங்களின் நோக்கம். சம்பள விகிதத்தை நிர்ணயம் செய்வதில் யாருக்கும் அநீதி ஏற்பட நாங்கள் விட மாட்டோம். இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண்போம். இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்