இடைத்தேர்தலுக்கு பிறகு கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் காங். மூத்த தலைவர் வீரப்பமொய்லி பேட்டி

இடைத்தேர்தலுக்கு பிறகு கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்பமொய்லி கூறினார்.

Update: 2019-10-31 23:31 GMT
பெங்களூரு,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான வீரப்பமொய்லி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மோசமான ஆட்சி, தவறான, திறமையற்ற நிர்வாக செயல்பாடுகளால் மாநில மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். டிசம்பர் 5-ந் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு பிறகு நுண்ணிய பெரும்பான்மையில் உள்ள எடியூரப்பா அரசு தானாகவே கவிழ்ந்துவிடும்.

எனக்கு கிடைத்துள்ள கள தகவலின்படி 15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும். எடியூரப்பா ஆட்சி கவிழ காங்கிரசுக்கு இந்த வெற்றி போதுமானது. கர்நாடகத்தில் 2 முறை வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏராளமான சொத்துகள் சேதம் அடைந்தன.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் இருந்து முதல்-மந்திரி எடியூரப்பாவால் நிதி உதவி பெற முடியவில்லை. இப்படி ஒரு திறனற்ற முதல்-மந்திரியை நான் பார்த்ததே இல்லை. வெள்ளத்தால் ரூ.38 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு ரூ.1,200 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசை நம்பவைத்து நிதி பெறுவதில் எடியூரப்பாவின் திறமை இவ்வளவு தான்.

நிதி பற்றாக்குறையால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் முடங்கிவிட்டன. காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்று கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இருந்து தேவேகவுடா சொல்கிறார். அவரது இந்த கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. இவ்வாறு வீரப்பமொய்லி கூறினார்.

மேலும் செய்திகள்