காயல்பட்டினம், திருச்செந்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்

காயல்பட்டினம், திருச்செந்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்.

Update: 2019-11-01 22:30 GMT
திருச்செந்தூர், 

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. கடந்த 2 நாட்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 3-வது நாளாக நேற்று அவர் காயல்பட்டினம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

காயல்பட்டினம் மாட்டுகுளம், புகாரி ஷெரீபு சபை பின்புறம் கடற்கரை சாலை, நயினார் தெரு, ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம் போன்று தேங்கியது. அவற்றை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார். பின்னர் அவர், அங்கு தேங்கிய மழைநீரை பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, வடிய வைக்குமாறு நகரசபை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பலத்த மழையால் திருச்செந்தூரை அடுத்த ஆலந்தலையில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் நாட்டுப்படகுகளை கடற்கரையில் நிறுத்துவதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். அங்கு கடல் அரிப்பு ஏற்பட்ட இடங்களை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்.

அப்போது உடன்குடி அனல்மின் நிலைய பணிக்காக, குலசேகரன்பட்டினம் அருகே கல்லாமொழி கடலில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணி நடைபெறுவதால், ஆலந்தலையில் கடல் அரிப்பு அதிகரிப்பதாகவும், எனவே ஆலந்தலையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கனிமொழி எம்.பி.யிடம் முறையிட்டனர்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசி, தூண்டில் வளைவு அமைக்க ஏற்பாடு செய்வதாக அவர் தெரிவித்தார். அப்போது தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், காயல்பட்டினம் நகர செயலாளர் முத்து முகம்மது மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்