திருப்பூரில், இருதரப்பினர் மோதல்; 5 பேருக்கு கத்திக்குத்து - 4 பேர் கைது

திருப்பூரில் இருதரப்பினர் மோதிக்கொண்டதில் 5 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-11-01 21:30 GMT
அனுப்பர்பாளையம்,

திருப்பூர் சாமுண்டிபுரத்தை அடுத்த திருமலைநகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமநாதன் என்ற அப்பு (வயது 21). இவருடைய நண்பர்கள் மணிகண்ட பிரகாஷ் (24), முகேஷ் (24), மதிவாணன் (20), வெங்கடேஷ். இவர்கள் அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி வழக்கம் போல ஹேமநாதன் மற்றும் அவருடைய நண்பர்கள் அந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஹரி மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் அங்கு சென்று மோட்டார்சைக்கிள்களை தாறுமாறாக ஓட்டி கிரிக்கெட் விளையாடுவதற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஹேமநாதன் மற்றும் அவருடைய நண்பர்கள் ஹரியிடம் சென்று நாங்கள் விளையாடும் இடத்தில் இடையூறு செய்ய வேண்டாம் என்று கூறி உள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். பின்னர் ஹரியும், அவருடைய நண்பர்களும் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ஹேமநாதன், மணிகண்ட பிரகாஷ், முகேஷ், மதிவாணன், வெங்கடேஷ் ஆகியோர் அங்குள்ள டி.என்.சேஷன் வீதியில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு சென்ற ஹரி மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் கத்தியால், ஹேமநாதன் உள்பட 5 பேரை குத்தி விட்டு தப்பி சென்றனர்.இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரியின் நண்பர்களான தினேஷ்குமார் (25), சரவணக்குமார் (25), மணிகண்டன் (24), சஞ்சய் ஆகியோரை கைது செய்தனர். இதில் சஞ்சய் கடந்த ஆண்டு குடிபோதையில் தியாகு என்பவரை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக உள்ள ஹரி மற்றும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்