அஞ்சுகிராமம் அருகே, மாயமான தொழிலாளி அழுகிய நிலையில் கடற்கரையில் பிணமாக மீட்பு - போலீஸ் விசாரணை

அஞ்சுகிராமம் அருகே மாயமான தொழிலாளி அழுகிய நிலையில் கடற்கரையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் சாவுக்கு காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-11-01 22:30 GMT
அஞ்சுகிராமம்,

அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெபமாலை (வயது 59). இவர், அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ஒரு சலூனில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவியும், 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

கடந்த 22-ந்தேதி காலை ஜெபமாலை வேலைக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து ஜெபமாலையின் மகன் அனீஷ்குமார் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெபமாலையை தேடி வந்தனர்.

இந்தநிலையில் அஞ்சுகிராமம் அருகே ரஸ்தாக்காடு கடற்கரையின் கழிமுக பகுதியில் நேற்றுஅழுகிய நிலையில் ஒரு ஆண் பிணம் கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், மாயமான ஜெபமாலையின் மகன் அனீஷ்குமாரையும் வரவழைத்து காட்டினர். அப்போது, பிணமாக கிடந்தவரின் அடையாளங்களை வைத்து, அது தனது தந்தை ஜெபமாலை தான் என்று அனீஷ்குமார் கூறினார்.

அதைத்தொடர்ந்து அழுகிய நிலையில் கிடந்த உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெபமாலை சாவுக்கு காரணம் என்ன? என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனையில் தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்