பரமத்தி திருமணிமுத்தாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது

பரமத்தி திருமணிமுத்தாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

Update: 2019-11-04 22:45 GMT
பரமத்திவேலூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து உற்பத்தியாகும் திருமணிமுத்தாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீரின்றி வறண்ட நிலையில் காணப்பட்ட திருமணி முத்தாற்றில் தற்போது தண்ணீர் இருகரைகளையும் தொட்டபடி செல்கிறது.

பரமத்தி வேலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட கோட்டக்கல்பாளையம், மாலிப்பட்டி, ராமதேவம், மேல்சாத்தம்பூர், மேலப்பட்டி, கூடச்சேரி, பில்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள சிற்றணைகள் மழையால் நிரம்பியுள்ளன. பரமத்தி அருகே 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடும்பன் குளத்திற்கு திருமணி முத்தாறு வழியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தண்ணீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கரையோரத்தில் பரமத்தி காந்திநகர் பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் மாட்டு தொழுவங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தூர்வார வேண்டும்

திருமணிமுத்தாறு மற்றும் இடும்பன் குளத்தை சீமைகருவேல மரங்கள் சூழ்ந்துள்ளது. இதனால் தண்ணீரின் போக்கு சரிவர இல்லாமல், இடும்பன் குளம் இதுவரை நிரம்பவில்லை. மேலும் மீன்கள் முள்ளில் சிக்கி அதிகளவில் செத்து மிதக்கின்றன. இடும்பன் குளத்தை முறையாக தூர்வாரினால் பரமத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் தொடர்ந்து திருமணிமுத்தாறில் தண்ணீர் வரத்து உள்ளதால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆழ்துளை மற்றும் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்