கர்நாடகத்தில் பொருளாதார கணக்கெடுப்பு பணி தொடக்கம்; முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்

கர்நாடகத்தில் பொருளாதார கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. இதனை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்.

Update: 2019-11-07 00:00 GMT
பெங்களூரு,

மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட செயலாக்கத்துறை, கர்நாடக அரசு ஆகியவை சார்பில் கர்நாடகத்தில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்துகொண்டு, தனது வீடு தொடர்பான விவரங்களை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து, பொருளாதார கணக்கெடுப்பு பணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி கர்நாடகத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுக்க பெரும் உதவியாக இருக்கும். முதல் முறையாக செல்போன் செயலி மூலம் தகவல்கள் திரட்டப்படுகிறது. தொழில் நிறுவனங்கள் எந்த மாதிரியான வர்த்தகம் செய்கிறது என்பது பற்றிய தகவல்கள் முழுமையாக அரசுக்கு கிடைக்கும்.

கணக்கெடுப்பாளர்கள் வீடு, வீடாக சென்று விவரங்களை சேகரிக்க வேண்டும். பொதுமக்களிடம் நல்ல முறையில் அணுகி தகவல்களை பெற வேண்டும். கணக்கெடுப்பாளர்கள் வரும்போது, பொதுமக்கள் அவர்கள் கேட்கும் தகவல்களை வழங்கி ஒத்துழைக்க வேண்டும்.

இந்த பொருளாதார கணக்கெடுப்பை வெற்றிகரமாக மேற்கொள்ள தலைமை செயலாளர் தலைமையில் மாநில அளவில் ஒரு குழுவும், மாவட்ட அளவில் கலெக்டர்கள் தலைமையில் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் பேசும்போது கூறியதாவது:-

பொருளாதார கணக்கெடுப்பு மூலம் புள்ளி விவரங்கள், திட்டங்களை வகுத்து செயல்படுத்த உதவும். இந்த கணக்கெடுப்பு பணிக்கு அனைத்து துறைகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கி, கணக்கெடுப்பாளர்கள் கேட்கும் அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும்.

இந்த பொருளாதார கணக்கெடுப்பு பணி வருகிற 15-ந் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு (2020) மார்ச் மாதம் இறுதி வரை நடைபெற உள்ளது. நகரங்களில் உள்ள 54 லட்சத்து 96 ஆயிரத்து 473 குடும்பங்களையும், கிராமப்புறங்களில் இருக்கும் 82 லட்சத்து 24 ஆயிரத்து 143 குடும்பங்களையும் நேரில் சந்தித்து விவரங்கள் சேகரிக்கப்படும்.

இந்த கணக்கெடுப்பு பணியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 120 பேர் ஈடுபடுகிறார்கள். தகவல்களை சேகரிக்க ஒரு பொது சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு தாலுகா அளவில் பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்கத்துறை இயக்குனர் விஜயகுமார், மாநில திட்டக்குழு துணைத்தலைவர் பி.ஜே.புட்டசாமி உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்