தனியார் இரும்பு உருக்காலையை மூட வலியுறுத்தி பல்லடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

பல்லடம் அருகே தனியார் இரும்பு உருக்காலையை மூட வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தை கோவை பி.ஆர்.நடராஜன் எம்.பி. தலைமையில் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-11-06 22:45 GMT
காமநாயக்கன்பாளையம்,

பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊருக்கு அருகே கண்ணப்பன் அலாய்டு என்ற பெயரில் தனியார் இரும்பு உருக்காலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால், விவசாயம், கால்நடைகள் மட்டுமல்லாமல் தங்களது உடல்நலனும் பாதிக்கப்படுவதாகவும், எனவே அந்த ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக இந்த இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நேற்று கோவை பி.ஆர்.நடராஜன் எம்.பி. தலைமையில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் அறிவித்து இருந்தனர்.

இந்த போராட்டத்திற்கு அனுமதி கேட்டு போலீசில் மனு கொடுத்து இருந்தனர். ஆனால் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அறிவித்தபடி முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை முதல் பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசாரின் தடையை மீறி முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள அனுப்பட்டி கிராம மக்கள் நேற்று காலை முதல் பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர்.

அதை தொடர்ந்து கோவை பி.ஆர்.நடராஜன் எம்.பி., உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து ஆகியோர் வந்தனர். இதனால் நேரம் செல்ல செல்ல கிராம மக்களின் கூட்டம் அதிகமானது. பின்னர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது தாசில்தார் சிவசுப்பிரமணியம், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு கலெக்டர் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர். அதுவரை காத்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் திருப்பூர் ஆர்.டி.ஓ. கவிதா பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஆர்.டி.ஓ.கவிதா கூறும்போது “ அனுப்பட்டியில் உள்ள தனியார் இரும்பு உருக்காலை விரிவாக்கத்திற்கு இது வரை அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தற்போது இயங்கி வரும் அந்த ஆலையை தொழில் பேட்டை நிறைந்த வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பது குறித்த உங்களது கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் மூலம் அரசு உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்” என்றார்.

இதனை ஏற்று போராட்டத்தை 10 நாட்களுக்கு ஒத்தி வைப்பதாகவும், அதற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர். முன்னதாக ஆர்.டி.ஓ.கவிதாவிடம் கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்தனர். இந்த முற்றுகை போராட்டம் நடைபெறுவதையொட்டி திருப்பூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் குணசேகரன், ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் புண்ணியமூர்த்தி, மாவட்ட விசைத்தறியாளர் சங்க தலைவர் வேலுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துகண்ணன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்