அரியாங்குப்பத்தில் பயங்கரம் வெடிகுண்டு வீசி ரவுடி வெட்டிக் கொலை

அரியாங்குப்பத்தில் ஓட ஓட விரட்டி வெடிகுண்டு வீசி ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-11-06 23:30 GMT
அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் சுப்பையா நகர், பாரதி வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ஜிம் பாண்டியன்(வயது 26). நேற்று மாலை 6 மணி அளவில் அதே பகுதியில் உள்ள கைப்பந்து மைதானத்தில் செல்போனில் பேசியபடி அவர் உட்கார்ந்திருந்தார்.

அப்போது இருட்ட தொடங்கியதால் அந்த பகுதி ஆள்நடமாட்டம் இன்றி காணப்பட்டது. இந்தநிலையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. இதைப்பார்த்ததும் உஷாரான ஜிம் பாண்டியன் மைதானத்தின் பின்புறமாக உள்ள சுவரை ஏறி குதித்து அலறியபடியே தப்பி ஓட முயன்றார்.

மைதானத்தின் சுவர் மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தின் இடையே உள்ள பகுதி என்பதால் அவரால் தப்பி ஓட முடியவில்லை. விரட்டி வந்த கும்பலை சேர்ந்தவர்கள் இருபிரிவாக பிரிந்து தப்பி ஓட விடாமல் வழிமறித்தனர். இதனால் செய்வதறியாமல் திகைத்த ஜிம் பாண்டியன் மீது அவர்கள் வெடிகுண்டு வீசினார்கள்.

பின்னர் அவரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் தலை துண்டாகி தொங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே ஜிம் பாண்டியன் உயிரிழந்தார்.

இந்த பயங்கர சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன்(தெற்கு), அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் மோப்ப நாய் அஜீத் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து பாண்டியனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்துஅரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ரவுடியான ஜிம் பாண்டியன் மீது அடிதடி, கொலை முயற்சி, மணல் திருட்டு என பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரை கொலை செய்த கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், பாபுஜி, கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்