ரூ.17 கோடியில் நடந்து வரும் திருச்சி சத்திரம் பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும்

ரூ.17 கோடியில் நடந்து வரும் திருச்சி சத்திரம் பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று ஆய்வுக்கு பிறகு அதிகாரி தெரிவித்தார்.

Update: 2019-11-07 23:00 GMT
திருச்சி,

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தினை நவீன வசதிகளுடன் ரூ.17 கோடியே 34 லட்சத்தில் சீரமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மற்றும் திருச்சி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைவர் டாக்டர் சி.என்.மகேஷ்வரன், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பிறகு மகேஷ்வரன் கூறியதாவது:-

சத்திரம் பஸ் நிலையத்தின் தரைத்தளத்தில் 350 எண்ணிக்கையில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம், 30 பஸ்கள் நிற்கும் வசதிகள் மற்றும் 11 கடைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, பொருட்கள் பாதுகாக்கும் அறை, ஓய்வறை மற்றும் கழிவறை வசதிகள், முதல் தளத்தில் உணவகங்களுடன் 22 கடைகள், காவல் உதவி மையம் போன்றவை அமைக்கப்பட உள்ளது. தற்போது டவுன் பஸ்கள் வெளியில் நிறுத்தப்படுவதால் பயணிகளின் வசதிக்காக 6 இடங்களில் 70 தற்காலிக நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. சத்திரம் பஸ் நிலைய மறுவளர்ச்சி மற்றும் சீரமைப்பு பணிகள் அனைத்தும் 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பூங்கா

பின்னர் பட்டவர்த் சாலையில் உள்ள பழமை வாய்ந்த புராதன பூங்காவினை ரூ.4 கோடி செலவில் புதுப்பிக்கும் பணியையும், ரூ.2 கோடி செலவில் புராதன சின்னங்கள் அமைக்கும் பணிகளையும், மேலபுலிவார்டு சாலையில் பன்அடுக்கு கார் நிறுத்துமிடத்தில் ரூ.19 கோடியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை அதிகாரி மகேஷ்வரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்