வேலூர் ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம் வாபஸ்

வேலூர் ஜெயிலில் முருகன் நேற்று உண்ணாவிரதத்தை கைவிட்டார். மேலும் அவர் தனது மனைவி நளினியை சந்திக்க அனுமதி கேட்டு மனு அளித்துள்ளார்.

Update: 2019-11-07 23:15 GMT
வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் அறையில் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஜெயிலில் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதன்படி முருகன் தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

தனி அறையில் இருந்து வழக்கமான அறைக்கு மாற்றக்கோரியும், ஜெயில் சலுகைகளை மீண்டும் வழங்க வலியுறுத்தியும் அவர் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி முருகனுக்கு ஆதரவாக அவருடைய மனைவி நளினியும் கடந்த 26-ந் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். இருவரும் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இருவரின் உடல்நிலையும் மோசமானது. ஜெயில் அதிகாரிகளின் தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் நளினி கடந்த 5-ந் தேதி தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

அதேபோன்று முருகனையும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முருகன், கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை நான் நளினியை சந்தித்து வந்தேன். எனவே வருகிற சனிக்கிழமை அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.க்கு கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், டி.ஐ.ஜி.க்கு அனுப்பி மனு குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து முருகன் பழங்கள் சாப்பிட்டு தனது 21 நாள் உண்ணாவிரதத்தை கைவிட்டார் என ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே முருகன் அறையில் கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் 2 சிம் கார்டுகள், ஒரு மெமரி கார்டு ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு பாகாயம் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்