இளைஞர்கள் பெற்றோர்களை புறக்கணிக்காமல் பரிவு காட்ட வேண்டும் - கலெக்டர் வீரராகவ ராவ் வேண்டுகோள்

இளைஞர்கள் பெற்றோர்களை புறக்கணிக்காமல் பரிவு காட்ட வேண்டும் என்று கலெக்டர் வீரராகவ ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-11-07 22:30 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் சார்பில் உலக முதியோர் தினவிழா மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:- மூத்த குடிமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து அவர்களது உரிமைகளை அங்கீகரித்திடும் நோக்கத்தினை பொதுமக்களிடையே வலியுறுத்திடும் விதமாக ஆண்டுதோறும் உலக முதியோர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் மூத்த குடிமக்களின் நலனுக்காக பல்வேறு அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆதரவற்ற மூத்த குடிமக்கள் நலனுக்காக ஒரு முதியோர் இல்லமும், 2 ஒருங்கிணைந்த இல்லங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மூத்த குடிமக்கள் நலனுக்காக முதியோர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய உதவித்தொகை திட்டம், பராமரிப்பு இல்லங்கள் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் மூத்த குடிமக்களுக்கு அவர்களது உணர்வுகளை புரிந்து கொண்டு மதிப்புடன் நடத்தக்கூடிய உறவுமுறை பந்தங்களே முழுமையான தீர்வாக அமையும். இளைஞர்கள் வயது முதிர்ந்த தங்களது பெற்றோர்களை புறக்கணித்திடாமல் அவர்களை பரிவுடன் அரவணைத்து வாழவேண்டும். அதேவேளையில் மூத்த குடிமக்களும் வயது முதிர்ந்த காலத்தில் தங்களது வயது மற்றும் தனிமை குறித்து சோர்வடையாமல் புதிய சிந்தனைகளில் தங்களை ஈடுபடுத்தி மகிழ்ச்சியாக வாழவேண்டும். சரியான உணவு பழக்கவழக்கத்தினையும் முறையே கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதனை தொடர்ந்து சமூக நலத்துறை சார்பில் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்களுக்கு போர்வை, குடை, ஊன்றுகோல் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

விழாவில் மாவட்ட சமூகநல அலுவலர் (பொறுப்பு) ஜெயந்தி, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் குமரகுருபரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சிவசங்கரன், மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு சேசுராஜ், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் உள்பட அரசு அலுவலர்கள், மூத்த குடிமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்