தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா வேட்டையாடி விடும் என சிவசேனா பயப்படுகிறது; காங்கிரஸ் சொல்கிறது

தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா வேட்டையாடி விடும் என்று சிவசேனா பயப்படுகிறது என மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் கூறியுள்ளார்.

Update: 2019-11-07 23:55 GMT
மும்பை,

மராட்டியத்தில் ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இருந்தும் சிவசேனா முதல்-மந்திரி பதவியில் பங்கு கேட்பதால் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் நேற்று ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘‘சிவசேனாவும், பா.ஜனதாவும் மெகா கூட்டணி கட்சிகள். தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா வேட்டையாடி விடும் என சிவசேனா பயப்படுகிறது. இதில் இருந்தே பா.ஜனதா எவ்வளவு ஊழல் நிறைந்த கட்சி என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இதனால் தான் நாம் அவர்களிடம் இருந்து மராட்டியத்தை காப்பாற்ற வேண்டும். மெகா கூட்டணிக்கு ஆட்சி அமைக்க தார்மீக உரிமை இருக்கிறதா?’’.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா விலைக்கு வாங்கி விடும் என சிவசேனா பயப்படுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட்டும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்