பெங்களூரு நகரில் பலத்த பாதுகாப்பு; போலீஸ் கமிஷனர் பேட்டி

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதையொட்டி பெங்களூரு நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது என்று மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் கூறினார்.

Update: 2019-11-08 00:30 GMT
பெங்களூரு,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக பிரச்சினை நீடித்து வருகிறது.

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு விரைவில் வெளிவர உள்ளது.

வருகிற 17-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற உள்ளார். இதனால் அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியாகும் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்எச்சரிக்கையாக பெங்களூரு நகரில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-


“அயோத்தி வழக்கில் விரைவில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளிக்க உள்ளது. இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் பல்வேறு கட்டங் களாக ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. தீர்ப்பு வெளியாவதையொட்டி பெங்களூரு நகரில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து வகையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தீர்ப்பு வெளியாகும் தினத்தில் அனைத்து போலீஸ் அதிகாரிகளும் பணியில் இருப்பார்கள்.

பெங்களூரு நகரில் பாதுகாப்பு பணியில் போலீசாருடன் துணை ராணுவ படையினரும், அதிவிரைவு படையினரும் ஈடுபட உள்ளனர். அயோத்தி வழக்கில் தீர்ப்பு வருவதையொட்டி பல்வேறு இந்து, முஸ்லிம்கள் அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது அவர்கள் அனைவரும் கோர்ட்டு தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அமைதி காக்க இருப்பதாக உறுதி அளித்துள்ளனர். அத்துடன் கொண்டாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபடமாட்டோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். மொத்தத்தில் பெங்களூரு நகரில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் பாதுகாப்போம் என்ற நம்பிக்கையை மேலும் உறுதி செய்வோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்