மாவட்டத்தில் 1,667 பேருக்கு தாலிக்கு தங்கம் - அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா வழங்கினர்

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.11 கோடியே 43 லட்சத்து 48 ஆயிரத்து 136 மதிப்பீட்டில் 1,667 பேருக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவிகளை தமிழக அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் வழங்கினர்.

Update: 2019-11-08 23:00 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கி பேசினார். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், பொன்.சரஸ்வதி, சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூகநல அலுவலர் கோமதி வரவேற்றார்.

இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு 1,667 பேருக்கு ரூ.11 கோடியே 43 லட்சத்து 48 ஆயிரத்து 136 மதிப்பீட்டில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதிஉதவிகளை வழங்கினர். மேலும் 125 பேருக்கு ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்து 125 மதிப்பீட்டில் இலவச தையல் எந்திரங்களும் வழங்கப்பட்டது.

முன்னதாக நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரத்து 524 பேருக்கு 150 கிலோ தங்கம் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 1,667 பேருக்கு சுமார் ரூ.11 கோடி மதிப்பீட்டில் தாலிக்கு தங்கமும், திருமண நிதிஉதவியும் வழங்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தாய்மார்களுக்கு என கொண்டு வந்த திட்டங்களை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். அனைத்து திட்டங்களும் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.

மேலும் செய்திகள்