கிராமப்புறங்களில் நடமாடும் அவசர கால்நடை சிகிச்சை ஆம்புலன்ஸ் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நடமாடும் அவசர கால்நடை சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவையை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

Update: 2019-11-08 22:45 GMT
கிரு‌‌ஷ்ணகிரி,

கால்நடைகளுக்கான அவசர மருத்துவ சேவையை இருப்பிடத்திலேயே வழங்கவும், தேவைப்பட்டால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தொடர் சிகிச்சைக்காக அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு மாற்றிடும் வகையில் சேவைகள் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். இதற்காக தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2016-2017-ன் கீழ் ரூ.18.93 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 22 வாகனங்கள் கிரு‌‌ஷ்ணகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் கடந்த 5-ந் தேதி வழங்கினார். இந்த நிலையில் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள நடமாடும் கால்நடை மருத்துவ அவசர ஆம்புலன்சை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து பேசிய கலெக்டர், கால்நடைகளின் அவசர சிகிச்சைகளை அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் சிகிச்சை வசதி கிடைக்காத விவசாயிகள் ‘1962“ என்ற இலவச எண்ணை அழைத்து கால்நடைகளுக்கான மருத்துவ சேவையினை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

இந்த நிகழ்ச்சியின்போது கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் மனோகரன், துணை இயக்குனர் இளங்கோவன், பல்கலைக்கழக பேராசிரியர் விஜயகுமார், உதவி இயக்குனர்கள் மரியசுந்தர், அருள்ராஜ், கால்நடை உதவி மருத்துவர் ஸ்ரீவித்யா மற்றும் ஆம்புலன்ஸ் மருத்துவர் வான்மதி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்