ஆன்லைன் ஏல முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பயிற்சி கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு

விருத்தாசலத்தில் ஆன்லைன் ஏல முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பயிற்சி கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-08 22:30 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் பெரியார் நகரில் தமிழ்நாடு வனத்தோட்ட கழக மண்டல மேலாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் மூலம் வனத்தோட்ட கழகத்திற்கு உட்பட்ட மண்டலங்களில் சாகுபடி செய்யப்பட்ட முந்திரி ஏலம் விடும் பணி நடக்கும். இதில் குத்தகைதாரர்கள் ஏலம் எடுத்து விளைபொருட்களை அறுவடை செய்வார்கள்.

இதுவரை திறந்த வெளியில் நடந்த ஏலமானது, தற்போது மெட்டல் ஸ்கிராப்ட் கார்ப்பரே‌‌ஷன் லிமிடெட் என்ற மத்திய அரசு நிறுவனம் 2020-ம் ஆண்டு ஆன்லைன் மூலம் முந்திரி ஏலத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக குத்தகைதாரர்கள் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி கூட்டம் நேற்று மண்டல மேலாளர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மண்டல மேலாளர் சுதாகர் தலைமை தாங்கினார். வனச்சரகர் செந்தில்குமார், வனவர்கள் சுந்தரேசன், செல்வமணி, மதன ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆன்லைன் மூலம் ஏலம் எடுப்பதால் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். அனைத்து தரப்பினரும் ஏலத்தில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் உருவாகும். ஆன்லைன் ஏலத்தால் போட்டி அதிகரிப்பதால் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். ஏலம் விடுவதில் பாரபட்சம் இருக்காது. மேலும் ஒப்பந்ததாரர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய கட்டணங்கள் எதுவும் இல்லை. பாரபட்சமின்றி அனைவரும் ஏலத்தில் கலந்து கொள்ள முடியும்.

ஆன்லைனில் எளிய முறையில் பதிவு செய்யலாம். செல்போன் மூலம் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏலம் குறித்து 15 தினங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிடப்படும். ஒரு குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே ஏலம் எடுப்பது, இதன் மூலம் தடுக்கப்படும் என மண்டல மேலாளர் சுதாகர் விவசாயிகளிடம் தெரிவித்தார்.

அப்போது விவசாயிகள் ஆன்லைன் மூலம் ஏலம் விடுவதால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், மேலும் இத்தொழிலை நம்பி உள்ள ஏராளமான தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் நீதிமன்றம் மூலம் ஆன்லைன் ஏலத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்குத்தொடுக்கப் போவதாக விவசாயிகள் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்