நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு, ஓடும் பஸ்சில் வி‌ஷவண்டு கடித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் படுகாயம்

கடலூர் அருகே ஓடும் பஸ்சில் வி‌ஷவண்டு கடித்து படுகாயம் அடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2019-11-10 22:30 GMT
கடலூர்,

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் குமரய்யா(வயது 52). இவர் பணிமுடிந்து நேற்று காலை விழுப்புரத்தில் இருந்து பஸ்சில் கடலூருக்கு வந்து கொண்டிருந்தார்.

நெல்லிக்குப்பம் அருகே உள்ள தோட்டப்பட்டு பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தபோது எங்கிருந்தோ பறந்து வந்த 3 வி‌ஷவண்டுகள் இன்ஸ்பெக்டர் குமரய்யாவின் கழுத்து பகுதியில் கடித்தன. இதில் வலிதாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். உடனே மற்ற பயணிகள் அவரது கழுத்தில் இருந்த வி‌ஷ வண்டுகளை அப்புறப்படுத்தினர். மேலும் பக்கவாட்டு ஜன்னல்களை அவசர அவசரமாக மூடினர்.

பின்னர் பஸ் அங்கிருந்து புறப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றதும், குமரய்யாவை பயணிகள் சிலர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஓடும் பஸ்சில் வி‌ஷ வண்டுகள் கடித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் நெல்லிக்குப்பம் அருகே வி‌ஷ வண்டு கடித்து பெண் படுகாயம் அடைந்தார். அதுபற்றிய விவரம் வருமாறு:–

பண்ருட்டி தாலுகா கீழ்கவரப்பட்டு அருகே உள்ள எஸ்.கே.பாளையம் பகுதியை சேர்ந்த கோதண்டராமன் மனைவி ரேவதி(வயது 47). இவர் அதே பகுதியில் உள்ள தோப்பில் கொய்யாப்பழம் பறித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை வி‌ஷ வண்டுகள் கடித்தன. இதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த ரேவதியை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்