உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

Update: 2019-11-10 22:30 GMT
பண்ருட்டி, 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று பண்ருட்டியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நல்ல லாபத்தில் இயங்கி வருகிறது. ஆனால் இந்நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்திற்கோ, தமிழ்நாட்டிற்கோ எந்த நன்மையும் இல்லை. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதில்லை. தமிழகத்தில் வேலையில்லா பிரச்சினை தலைவிரித்தாடுகிறது.

கோவை மற்றும் திருப்பூரில் பஞ்சாலைகள், ஆயத்தஆடை உற்பத்தி நிறுவனங்களில் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். தற்போது அங்கு உற்பத்தியும் வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளது. நம்மிடம் போதுமான நிலக்கரி இருந்தும் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. சிமெண்டு ஆலைகள் உற்பத்தி செலவில் அதிகளவு லாபம் வைத்து சிமெண்டை விற்பனை செய்கிறது. இதை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்வதில்லை. வீடு, கட்டிடங்கள் கட்ட மணல் கிடைக்க எந்த திட்டமும் இல்லை. தமிழ்நாட்டில் எந்த புதிய தொழிற்சாலைகளும் தொடங்கப்படவில்லை. கடலூர் சிப்காட்டில் இயங்கி வந்த தொழிற்சாலைகளும் மூடப்பட்டு விட்டன. விவசாயிகளுக்கு போதுமான யூரியா கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கடலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கடலூர் குமார், வேலுமணி, முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர்கள் மணி, நாகராஜ், சபியுல்லா, வசந்தம் சாகுல் அமீது ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்