சென்னை விமான நிலையத்தில் ரூ.71½ லட்சம் தங்கம் பறிமுதல் - ரூ.63½ லட்சம் குங்குமப்பூவும் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து பேண்ட்டில் மறைத்து வைத்து கடத்திவந்த ரூ.71½ லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 800 கிராம் தங்கத்தையும், ரூ.63½ லட்சம் ஈரான் நாட்டு குங்குமப்பூவையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-11-10 23:25 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்துவரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் பயணம் செய்த கேரளாவைச் சேர்ந்த அமீர் தேக்குல்லா கேண்டி(வயது 41), ஹரூன் நஹர் மோயத்(29) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. பின்னர் இருவரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

அதில் அவர்கள் இருவரும் அணிந்து இருந்த பேண்ட்டில், பெல்டு அணியும் பகுதியில் ரகசிய அறை அமைத்து அதில் தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.71 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 800 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த அமீர் தேக்குல்லா கேண்டி, ஹரூன் நஹர் மோயத் இருவரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இவர்கள் இந்த தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தனர்?, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்?. சர்வதேச கடத்தல் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்று விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் துபாயில் இருந்து மஸ்கட் வழியாக சென்னைக்கு வந்த விமானத்தில் வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது ஜாவித் முசஹர்(22) என்பவர் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் ஈரான் நாட்டு குங்குமப்பூ பாக்கெட்டுகள் அதிகளவில் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.63 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 26 கிலோ 500 கிராம் எடைகொண்ட குங்குமப்பூ பாக் கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முகமது ஜாவித்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்