பாளையங்கோட்டையில், சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம் - காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

பாளையங்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி ஊர்வலம் சென்றனர்.

Update: 2019-11-12 22:30 GMT
நெல்லை,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சமையலர், உதவியாளர்களுக்கு விரைவாக பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளருக்கு ஒட்டுமொத்த தொகை ரூ.5 லட்சமும், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலம் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் இருந்து தொடங்கியது. முன்னாள் மாநில துணைத்தலைவர் குமாரவேல் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று சித்தா கல்லூரி முன்பு உள்ள திடலை வந்தடைந்தது. அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் பிச்சுமணி தலைமை தாங்கினார். செயலாளர் கோவில்பிச்சை கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் சமூக நலத்துறை பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் துரைசிங், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நெல்லை மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, பொருளாளர் வீரராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து பேசினர். இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்