அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தூய்மைப்பணி - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தூய்மைப்பணியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

Update: 2019-11-14 22:30 GMT
கரூர், 

உலக தர தினத்தை முன்னிட்டு கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தூய்மைப்பணி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு தூய்மைப்பணியை தொடங்கி வைத்து, துடைப்பத்தை வைத்து கொண்டு சுத்தப்படுத்தும் பணியில் அவர் ஈடுபட்டார். பின்னர் அவர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகளிடையே பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

2016-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமையினை உலக தர தினமாக அனுசரிக்கின்றோம். இந்த உலக தர தினத்தை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக்கொண்டு செயல்படுத்தி வருகிறோம். அந்த வகையில் தற்போது 2019-ம் ஆண்டு “நூற்றாண்டு கால தரம்” என்ற நோக்கத்தின் அடிப்படையில் உலக தர தினம் அனுசரிக்கப்படுகிறது. தரம் என்பது மிகவும் முக்கியமானது. மருத்துவர்களாகிய நீங்கள் நன்கு படித்து, ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருத்துவத்தை வழங்க வேண்டும்.

உலக அளவில் சாலை விபத்துக்களில் ஆண்டொன்றுக்கு 1¾ லட்சம் பேர் இறக்கும் நிலைமை இருக்கிறது. நமது நாட்டில் இயக்கப்படும் அதிநவீன வாகனங்களை இயக்கும் அளவுக்கு, சாலை பாதுகாப்பு குறி்த்த விழிப்புணர்வு இல்லாததே விபத்து உயிரிழப்புக்கு காரணமாகிறது. எனவே சாலை விதிகளை பின்பற்றி அனைவரும் வாகனத்தை இயக்குதல் வேண்டும்.

சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக செயல்படுத்துவது, சாலை விபத்துக்களை குறைக்க தேவைப்படும் இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைத்தல் போன்ற முறையான நடவடிக்கைகளால், இந்தியாவிலேயே சாலை விபத்துக்கள் குறைந்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

மருத்துவ மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் சூழல் தற்போது உள்ளது. தமிழக மாணவர்கள் எத்தகைய நுழைவுத்தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது அவர்களுக்கு உதவிகரமாக இருக்கிறது. சென்ற ஆண்டை விட நீட் தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியிருக்கிறது. நீங்கள் அனைவரும் எதிர்கால மருத்துவர்கள். ஒருவர் எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், ஆசிரியருக்கும், மருத்துவருக்கும் மக்கள் மனதில் நீங்காத இடமுண்டு. சாதாரண மாணவனை சமுதாயத்தில் மதிப்புமிக்கவனாக பட்டை தீட்டுபவர் ஒரு ஆசிரியர். அதுபோல, சாவின் விளிம்பில் இருக்கும் ஒருவருக்கு கடவுள் மனதில் தோன்ற மாட்டார், அவரை மீட்கும் மருத்துவரே கடவுளாக அவர்களுக்குத் தெரிவார்கள். அத்தகைய சிறப்பு மிக்க சேவைப்பணியை ஆற்றவுள்ள நீங்கள் உங்கள் பணியை தரமான பணியாக ஆற்ற வேண்டும் என்று மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.பாண்டியராஜன், கீதா எம்.எல்.ஏ., அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரோஸிவெண்ணிலா, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைத் தலைவர் நெடுஞ்செழியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் தானேஷ், கரூர் தெற்கு நகர செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், தெற்கு நகர இணை செயலாளர் எஸ்.பி.வீரப்பன், கரூர் நகர அம்மா பேரவை செயலாளர் செல்வராஜ், அமைப்புசாரா கட்டுமானபிரிவு மாநில செயலாளர் ராயனூர் சாமிநாதன், மாவட்ட மாணவரணி செயலாளர் கே.சி.எஸ்.விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்