திருட்டு வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவான தொழிலாளி மீண்டும் கைது

திருட்டு வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவான தொழிலாளியை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

Update: 2019-11-14 22:45 GMT
அந்தியூர், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பேரணாம்பட்டை சேர்ந்தவர் குரு என்கிற குருமூர்த்தி (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் உள்பட 7 பேர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மூங்கில்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் நகை திருடியதாக கடந்த 2009-ம் ஆண்டு அந்தியூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் 7 பேரும் பவானி ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் குருமூர்த்தி மட்டும் ஜாமீனில் வந்தார். இந்த நிலையில் வழக்கு சம்பந்தமாக குருமூர்த்தி பவானி கோர்ட்டில் ஆஜர் ஆகுமாறு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் குருமூர்த்தி ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனால் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து தற்போது குருமூர்த்தியை மீண்டும் கைது செய்ய ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால், ஏட்டு மாதே‌‌ஷ் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் குருமூர்த்தியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் குருமூர்த்தி பேரணாம்பட்டில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கொண்டு வந்து பவானி ஜே.எம்-2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி ஜெயராமன் வழக்கை விசாரித்து குருமூர்த்தியை கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்