தூத்துக்குடியில் ரெயிலில் அடிபட்டு ஐ.டி.ஐ. மாணவர் பலி

தூத்துக்குடியில் ரெயிலில் அடிபட்டு ஐ.டி.ஐ. மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-11-15 22:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி ரெயில் நிலையத்துக்கும், மீளவிட்டான் ரெயில் நிலையத்துக்கும் இடையே நேற்று காலை சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் ரெயிலில் அடிபட்டு சிதைந்த நிலையில் கிடப்பதாக, ரெயில்வே டிராக்மேன் அந்தோணி என்பவர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

உடனே ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்து கிடந்த வாலிபர் தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியை சேர்ந்த சங்கரசுப்பிரமணியன் மகன் பேச்சிமுத்து (வயது 21) என்பதும், அவர் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள ஐ.டி.ஐ.யில் 2-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

சம்பவ இடத்தில் பேச்சிமுத்துவின் சட்டை, செல்போன்கள், மணிபர்ஸ், செருப்பு ஆகியவை தண்டவாளம் அருகே வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் தனது உடமைகளை வைத்து விட்டு ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடந்தபோது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேச்சிமுத்துவின் தந்தை சங்கரசுப்பிரமணியன் தூத்துககுடி ரெயில் நிலையத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். ரெயிலில் அடிபட்டு ஐ.டி.ஐ. மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்