கையில் ஆதாரங்கள் இருந்தால், பொதுமக்கள் நேராக சி.பி.ஐ. அலுவலகத்தை அணுக முடியும் - கவர்னர் கிரண்பெடி தகவல்

கையில் ஆதாரங்கள் இ்ருந்தால் பொதுமக்கள் நேராக சி.பி.ஐ. அலுவலகத்தை அணுக முடியும் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

Update: 2019-11-15 22:00 GMT
புதுச்சேரி,

புதுவையில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்க புதுடெல்லியில் உள்ள சி.பி.ஐ. இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். கவர்னர் கிரண்பெடி இது குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் அதிக ஊழல் புகார்கள் வரும் நிலஅபகரிப்பு, கட்டுமான விவகாரம், ஒப்பந்தங்கள் தொடங்கி அரசு அலுவலகங்கள் வரை சி.பி.ஐ. நேரடியாக சென்று ஆய்வு செய்யும். ஊழல் புரிவோருக்கு தண்டனை வாங்கி கொடுக்கும். புதுச்சேரிக்கு இது மிக அவசிய தேவை. அத்துடன் ஊழல் செய்பவர்களை சி.பி.ஐ. பொறி வைத்து பிடிக்கலாம்.

பிரதமர், மத்திய உள்துறை மந்திரி ஆகியோர் எனது கோரிக்கையை ஏற்று புதுவையில் சி.பி.ஐ. கிளை அமைத்தமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கவர்னரின் வருடாந்திர மாநாட்டில் புதுவையில் சி.பி.ஐ. கிளை அமைக்க வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்தேன். புதுச்சேரியில் நடைபெறும் பெரிய ஊழல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை மக்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

புதுச்சேரி மக்கள் இனிமேல் கையில் ஆதாரங்கள் இருந்தால் சி.பி.ஐ. அலுவலகத்தை நேரடியாக அணுக முடியும். சி.பி.ஐ. கிளை மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும். சி.பி.ஐ. தனிப்பட்ட அமைப்பு என்பதால், தங்களிடம் உள்ள ஆதாரங்களை சமர்பித்தால் அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளும் என்று மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். .

மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் சென்டாக் அலுவலகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியது அனைவருக்கும் தெரியும். அப்போது அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. தற்போது ஏனாமிற்கு நான் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட போது அங்கு சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி ரூ.5 கோடி மதிப்பில் கட்டுமானங்கள் கட்டியதும், அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது. அந்த சம்பவமும் புதுவை மாநிலத்திற்கு சி.பி.ஐ. கிளை அலுவலகத்தை பெற பெரிதும் உதவியாக இருந்தது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்