சென்னை புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா 5 பேர் கைது

சென்னை புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா விற்பனையாளர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பல்லாவரத்தில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-17 22:15 GMT
தாம்பரம்,

சென்னை புறநகர் பகுதிகளான சேலையூர், சிட்லப்பாக்கம், பீர்க்கன்காரணை, பல்லாவரம், சங்கர்நகர், குரோம்பேட்டை, தாம்பரம் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கடந்த சில மாதங்களாக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கஞ்சா விற்பனை பெருகி உள்ளது.

குறிப்பாக சேலையூர் போலீஸ் உதவி கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள சேலையூர், பீர்க்கன்காரணை பகுதிகளில் உள்ள கல்லூரிகள், பள்ளிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

கிழக்கு தாம்பரம் ரெயில்வேகேட் பகுதி, ரெயில்வே மைதானம், கிறிஸ்தவ கல்லூரி வெளி வளாக பகுதி, இந்திய விமானப்படை சாலை, அகரம் சாலை, திருவஞ்சேரி, அகரம் சாலையில் பாரத் பல்கலைக்கழகம் வெளி பகுதிகளில் இந்த கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலையூர் பகுதியில் தனியார் பஸ் சக்கரத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலியானார்கள். அவர்களின் தலை நசுங்கி அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்ததால் அடையாள அட்டை இருக்கிறதா? என அவர்களின் பேண்ட் பையில் போலீசார் சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதேபோல் பல்லாவரம், பம்மல் பகுதிகளிலும் மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்கப்படுகிறது. பழைய பல்லாவரம் ரேடியல் சாலை, வேல்ஸ் பல்கலைக்கழகம் செல்லும் சாலை பகுதிகளில் மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுகிறது. கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், போதைக்கு அடிமையாகும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

சென்னை புறநகர் பகுதியில் கஞ்சா போதையால் மாணவர் சமுதாயம் சீரழிந்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் போலீஸ் அதிகாரிகள் மனது வைத்தால் மட்டுமே அது முடியும். இதற்காக ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தனி பிரிவு போலீஸ் படை அமைத்து கஞ்சா விற்பனையை தடு்க்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி முதல்வர்களை அழைத்து போலீசார் உயர் அதிகாரிகள் எச்சரிக்கை கூட்டம் நடத்தவேண்டும். மாணவர்களில் ஒரு தரப்பினர், சமூக விரோதிகளிடம் தொடர்பு வைத்துக்கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா வாங்கி கொடுக்கும் ஏஜெண்டாக செயல்படுகின்றனர். அவர்கள் யார்? என்பதை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல கனவுகளோடு எங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்புகிறோம். அவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகாமல் பாதுகாக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்தநிலையில் பல்லாவரம் வேல்ஸ் கல்லூரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எண்ணூரை சேர்ந்த காளிதாஸ் (வயது 37), அரிவேந்தன் (26), பரத்குமார் (24), தாம்பரத்தை சேர்ந்த அபினேஷ் (24), யோகேஷ் (23) ஆகிய 5 பேரை பல்லாவரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 3½ கிலோ கஞ்சா பொட்டலங்கள், மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்யப்பட்டது.

முன்னதாக நடத்திய விசாரணையில், கைதான காளிதாஸ்தான், பல்லாவரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலின் தலைவனாக செயல்பட்டது தெரிந்தது. இவரின் கீழ் பலபேர் கொண்ட கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும், முன்பு சென்னை சத்யாநகரில் இருந்து கஞ்சா வாங்கியதாகவும், தற்போது சென்னையில் கெடுபிடி அதிகமாக இருப்பதால் ஆந்திராவில் இருந்து இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்தி வந்து விற்பதும் அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்