நண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்காவிட்டால்: ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக - பெண் என்ஜினீயருக்கு மிரட்டல்

நண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்காவிட்டால் ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக பெண் என்ஜினீயரை மிரட்டிய முன்னாள் காதலனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

Update: 2019-11-19 00:00 GMT
பெங்களூரு,

ஜார்கண்டை சேர்ந்தவர் அங்கூர் குமார். இவர் பெங்களூரு ரூபேனஅக்ரஹாராவில் தங்கி வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் திருமணம் செய்யும் நோக்கத்தில் தனது விவரங்களை திருமண இணையதளத்தில் பதிவு செய்தார்.

இந்த நிலையில் பெங்களூருவில் வசித்து வரும் 18 வயது நிரம்பிய கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயரின் விவரங்களை அங்கூர் குமார் திருமண இணையதளத்தில் பார்த்து விருப்பம் தெரிவித்தார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. அதன்பிறகு 2 பேரும் செல்போன்களில் பேசினர். இந்த வேளையில் அவர் பெண் என்ஜினீயரை காதலித்தார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி அங்கூர் குமார், பெண் என்ஜினீயருடன் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அங்கூர் குமாரின் பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரியவந்தது. அங்கூர் குமார் மற்றும் பெண் என்ஜினீயர் 2 பேரும் வெவ்வேறு சாதி மற்றும் கலாசாரத்தை பின்பற்றுபவர்கள். இதனால் திருமணத்துக்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கூர் குமார், பெண் என்ஜினீயருடன் பேசுவதை தவிர்த்தார்.

இதனால் மனம் உடைந்த பெண் என்ஜினீயர் பொம்மனஹள்ளி போலீசில் கடந்த மார்ச் மாதம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கூர் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு அவர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

அதன்பிறகும் அங்கூர் குமார் வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து பெண் என்ஜினீயரை தொடர்பு கொண்டு பேசி தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அவருடைய வீட்டுக்கு சென்ற பெண் என்ஜினீயரை அவர் திட்டியுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் என்ஜினீயருக்கு போன் செய்த அங்கூர் குமார், ‘வருகிற 22-ந் தேதி எனக்கு பிறந்தநாள். பிறந்தநாளையொட்டி நீ, எனது நண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னுடன் சேர்ந்து இருந்த ஆபாச வீடியோவை இணையதளங்களில் பதிவேற்றிவிடுவேன்’ என்று மிரட்டினார்.

இதனால் பயந்துபோன பெண் என்ஜினீயர் கோனனகுண்டே போலீசில் அங்கூர் குமார் மீது புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணைக்கு ஆஜராகும்படி அங்கூர் குமாருக்கு போலீசார் ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்