தொழிலாளி கொலை வழக்கு: லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனை புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு

புதுவை தொழிலாளி கொலை வழக்கில் லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2019-11-19 00:28 GMT
புதுச்சேரி,

சேதராப்பட்டு அருகே உள்ள கரசூர் கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது38). தொழிலாளி.

கடந்த 2016-ம் ஆண்டு அய்யப்பன்,கரசூர் மெயின்ரோட்டை சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம் (37) ஆகியோர் அப்பகுதியில் உள்ள சாராயக் கடைக்கு சென்றனர்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்து இருவரும் ஆறுமுகம் வீட்டிற்கு வந்தனர். மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், அய்யப்பனை கல்லால் தாக்கி கொலை செய்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தனபால் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் குற்றவாளி ஆறுமுகத்துக்கு ஆயுள்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தலைமை நீதிபதி தனபால் தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்