திருச்சியில் 2-வது நாளாக நடந்த பெண் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் திருநங்கை உள்பட 364 பேர் தேர்வு

திருச்சியில் 2-வது நாளாக நடந்த பெண் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் திருநங்கை உள்பட 364 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2019-11-19 22:45 GMT
திருச்சி,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர், ச்ிறை காவலர், தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான உடல் தகுதி தேர்வு கடந்த 6-ந் தேதி முதல் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்து வருகிறது. ஆண்களுக்கு முதல் கட்ட உடல் தகுதி தேர்வு முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் பெண் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியது. திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் 635 பேர் பங்கேற்றனர். இதில் 421 பேர் தேர்ச்சி அடைந்தனர்.

திருநங்கை உள்பட 364 பேர் தேர்வு

இதனை தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக பெண் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு நடந்தது. இதில் 553 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டதில் 507 பேர் மட்டும் தேர்வில் கலந்து கொண்டனர்.

இவர்களில் புதுக்கோட்டையை சேர்ந்த சமிஷா என்ற திருநங்கை உள்பட 364 பேர் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து இன்று (புதன்கிழமை) ஏற்கனவே உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த ஆண்களுக்கு அடுத்தக்கட்டமாக கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட உடல்திறன் தேர்வு நடக்கிறது. இதில் 421 பேர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்