ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. ஆனால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

Update: 2019-11-21 23:00 GMT
பென்னாகரம்,

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக அங்குள்ள கபினி, கிரு‌‌ஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதனையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இவ்வாறு கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

குறைந்தது

இந்த நிலையில் கர்நாடகத்தில் மழையின் அளவு குறைந்தது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 7,500 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டியது.

ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்தும், பரிசல்களில் பயணம் செய்தும் மகிழ்ச்சி அடைவார்கள். இதேபோல் நேற்றும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வந்தனர். ஆனால் அருவிகளில் குளிக்க தடை நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோரங்களில் குளித்தனர். பரிசல்களில் பயணம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். 

மேலும் செய்திகள்